சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கணை நீடு எரி, மால்,
பண் - தக்கராகம்   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=H3fxoFq9P1A
5.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானம் சேர் மதி சூடிய
பண் - திருக்குறுந்தொகை   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w9O2L8OtDVo

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.033   கணை நீடு எரி, மால்,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருஅன்பில் ஆலந்துறை ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி )
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,
அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.

[1]
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.

[2]
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[3]
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[4]
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

[5]
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

[6]
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.

[7]
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.

[8]
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,
பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.

[9]
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.

[10]
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.080   வானம் சேர் மதி சூடிய  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருஅன்பில் ஆலந்துறை ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி )
வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை;
ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக்
கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!

[1]
காரணத்தர், கருத்தர், கபாலியார்,
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
ஆரணப்பொருள், அன்பில் ஆலந்துறை,
நாரணற்கு அரியான் ஒரு நம்பியே.

[2]
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து, உடன் ஆடிய
என்பின் ஆனை உரித்துக் களைந்தவன்,
அன்பிலானை, அம்மானை, அள் ஊறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே.

[3]
சங்கை, உள்ளதும்; சாவதும் மெய்; உமை-
பங்கனார் அடி பாவியேன், நான் உய;
அங்கணன், எந்தை, அன்பில் ஆலந்துறைச்
செங்கணார், அடிச் சேரவும் வல்லனே?

[4]
கொக்கு இற(ஃ)கர், குளிர்மதிச் சென்னியர்,
மிக்க(அ) அரக்கர் புரம் எரிசெய்தவர்,
அக்கு அரையினர், அன்பில் ஆலந்துறை
நக்க உரு(வ்) வரும், நம்மை அறிவரே.

[5]
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக்
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்;
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை
உள்ள ஆறு அறியார், சிலர் ஊமரே.

[6]
பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும்,
உறவுஎலாம் சிந்தித்து, உன்னி உகவாதே,
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே, தொழுது, ஏத்தி வணங்குமே!

[7]
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா
அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!

[8]
பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்-
கையன்மார் உரை கேளாது எழுமினோ!
ஐயன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
மெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே.

[9]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று
மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன்,
அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list